search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் கோபுரம்"

    காட்பாடியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    காட்பாடி கிளிதான்பட்டறையில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் செல்போன் கோபுரம் எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என்று போராட்டம் செய்தனர்.

    அப்போது எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சால் பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும். மேலும் கால்நடை மற்றும் பறவையினங்கள் இறக்க கூடும்.எனவே எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

    இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

    கூத்தாநல்லூர் அருகே செருவாமணியில் இருந்து மின்வினியோகம் வழங்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள மாரங்குடி ஊராட்சியில் உள்ள தாமரைப்பள்ளம் கிராமத்திற்கு ஏற்கனவே சென்ற மின் பாதையை மாற்றி செருவாமணியில் இருந்து மின்வினியோகம் வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் அந்தோணி தலைமையில் கிராம மக்கள், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தனித்துணை கலெக்டர் (நிலம்) பால்துரை, சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அன்பழகன், கச்சனம் இளம்மின் பொறியாளர் திருஞானம், வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலெக்டரிடம் கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு அதிகாரிகள் கூறியதின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து வடபாதி மங்கலம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கோட்டூர் ஒன்றிய செயலாளர் அந்தோணி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்தனர். #5officialsdead #Sudanhelicoptercrash
    கார்ட்டோம்:

    சூடான் நாட்டின் கிழக்கு பகுதி வழியாக இன்று அரசு அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அல் கடாரிப் மாநிலத்தில் உள்ள வயல்வெளியின் மீது பறந்தபோது அங்கிருந்த ஒரு செல்போன் கோபுரம் மீது பயங்கரமாக மோதியது.

    மோதிய வேகத்தில் அந்த ஹெலிகாப்டர் தீபிடித்து எரிந்தது. எத்தியோப்பியா நாட்டின் எல்லையோரத்தில் நடந்த இந்த விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    பொதுவாக, சூடான் நாட்டில் பயன்பாட்டில் உள்ள விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மிகவும் பழைமையான ரஷியா மாடலை சேர்ந்தவையாகும். கடந்த செப்டம்பர் மாதம் இங்குள்ள நைல் நதிக்கு அருகாமையில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உயிரிழந்தனர்.

    தொடர்ந்து, அக்டோபர் மாதம் தலைநகர் கார்ட்டோமில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையில் இரு ராணுவ விமானங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #5officialsdead #Sudanhelicoptercrash
    ஜெயங்கொண்டம் அருகே 5 ஜி செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கழுவந்தோண்டி கிராமம் மெயின் ரோட்டில் இருந்து அம்மன் கோவில் தெருவிற்கு செல்லும் பாதையில் தனியார் ஒருவரது இடம் உள்ளது. இந்த இடத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே 5 ஜி செல்போன் கோபுரம் அமைப்பதற்கு கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்கு தனியார் இடத்தின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்து கோபுரம் அமைப்பதற்கான 20 அடி ஆழமுள்ள குழி தோண்டப்பட்டது. 2 மாத காலமாக குழி மூடப்படாமல் இருந்ததால், கடந்த ஒரு மாத காலமாக பெய்த மழையின் காரணமாக தண்ணீர் வெளியேறாமல் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 5 ஜி செல்போன் கோபுரம் அமைப்பதனால் குழந்தைகள் உள்பட பலருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். 

    இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் காட்டு பகுதியில் அமைக்க வேண்டும். மேலும் தற்போது தோண்டப்பட்டுள்ள குழியை மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் ரோட்டில் கழுவந்தோண்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்ததால் அங்கிருந்து கலைந்து செல்லாமல் மழையில் நனைந்தப்படி மறியலில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் அண்ணாதுரை, செல்வம், வளையாபதி மற்றும் வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது செல்போன் கோபுரம் அமைப்பது குறித்து உங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ளது கேர்பெட்டா. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளுக்கு நடுவில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் கேர்பெட்டாவில் செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். இதையடுத்து அந்த இடத்தில் கோத்தகிரி தாசில்தார் நேரில் ஆய்வு செய்து, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்தார்.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்து, கேர்பெட்டாவில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி பெற்றது. இதையடுத்து அந்த பணி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணிக்கு செல்போன் கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அலெக்சாண்டர், கவுதம், நசீர், நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார், கோர்ட்டு உத்தரவு பெறப்பட்டு உள்ளதால் பணிகளை தடுத்து நிறுத்துவது சட்டப்படி குற்றம். வேண்டுமென்றால் ஐகோர்ட்டில் பொதுமக்கள் சார்பில் மனு தாக்கல் செய்து செல்போன் கோபுரம் அமைக்க தடை உத்தரவு பெறலாம். மேலும் மாவட்ட கலெக்டரிடம் குடியிருப்பு பகுதி அல்லாமல் வேறு இடத்தில் செல்போன் கோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்கலாம் என்று யோசனை கூறினர். இதை கேட்டறிந்த பொதுமக்கள், எங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவிக்கவே திரண்டோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களது நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர். 
    குளித்தலை பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    குளித்தலை:

    குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 16 மற்றும் 18-வது வார்டு பகுதியில் உள்ள பழையகோர்ட்டு தெரு, செக்கடி புதுத்தெரு, மரக்கடை ஸ்டோர் பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊர்வலமாக குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க நேற்று வந்தனர்.

    இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் செல்போன் கோபுரங்கள் அமைக்கக்கூடாதென உச்ச நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டத்திற்கும், நீதிமன்ற தீர்ப்பிற்கு புறம்பாகவும் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பழைய கோர்ட்டு தெரு, செக்கடி புதுத்தெரு, மரக்கடை ஸ்டோர் பகுதி குடியிருப்புகள், பள்ளி, கோவில்கள் போன்றவை சுற்றியுள்ள பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையான நோய்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். நிலத்தடிநீர் குறையும் என்பது போன்ற பலவகையில் எங்கள் பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே பொதுமக்கள் உயிர் பாதுகாப்பிற்காகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க இங்கு செல்போன் கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும் என்று மனு அளிக்கவந்ததாக தெரிவித்தனர். பின்னர் தங்கள் மனுவை கோட்டாட்சியர் லியாகத்திடம் அளித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அவர்கள் நகராட்சி பொறியாளர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×